கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, June 21, 2010

மழை எனும் மந்திரம்


மழைக் காலமோ, வெயில் காலமோ, குளிர் காலமோ , தமிழ் நாட்டை விட வட மாநிலங்களில்தான் அதிகம் உணர முடிகிறது என்பது மிக சரியான வார்த்தை. கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து மழைக் காலம் ஆரம்பம் .

நமது ஊரை பொறுத்த வரை மழைக்காலத்திலும் ஒரு நாள் மழை , இரண்டு நாள் மழை மாத்திரமே தொடர்ந்து இருக்கும்.

ஆனால் வட மாநிலத்தில் கொடூரமான 48 பாகை அளவு வெயில் அடித்த மறுநாள், மழைக்காலம் என்றதும் மேகக் கூட்டம் எங்கிருந்து பயணித்ததோ தெரியவில்லை. முழுவதும் மூடியது. 16 ஜூன் ல் மூடிய வானம் இன்றும் திறக்க வில்லை. அதாவது சூரியனைக் கண் விழிக்க விடவில்லை.

வெளி நாட்டில் தொடர்ந்து விடுப்பில்லாமல் வேலை பார்த்து கிடைத்த இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு வந்த ஒருவன் மனைவியைக் கண்டதும் ஆவலுடன் வீட்டுக்குள்ளேயே கொஞ்சி விளையாடுவதைப் போல, கடுமையான வெப்பம் எனும் ஆற்றல் முழுவதும் வெளியேறியதும் சோர்ந்து வீடு திரும்பி இரண்டு மூன்று மாதம் விடுப்பில் வீட்டுக்குள்ளிருந்து வெளி வருவதில்லை சூரியன், வட மாநிலங்களில்.

நமது ஊரில் சூரியனுக்கு அரசு வேலை. நிறைய விடுமுறை. அதனால் ஒரு நாள் வெளியில் வருவான். மறு நாள் வீட்டுக்குள் இருப்பன். சுக வாழ்க்கை.

துவைத்த துணி காயாது, வெளியில் சென்றால் அனைத்தும் நனையும் என்பதெல்லாம் இருந்தாலும் , மழை என்ற உணர்வு மகிழ்ச்சியை மட்டுமே தருகிறது.

இன்று இங்கு கடுமையான மழை தொடர்ந்தது. மனதில் சிறு உந்துதல். சிறிது காலாற நடக்க எண்ணினேன் தனியாக நனைந்து கொண்டு.

சிறு வயதில் மழையில் நனைந்து வீட்டில் அம்மாவிடம் அடி வாங்கிய நாட்கள் ,
பள்ளி நாட்களில் மழையில் வேகமாக மிதிவண்டி மிதித்து நண்பனுடன் போட்டியிட்ட நாட்கள்
கல்லூரியில் மழையில் தோழியுடன் நடந்த நாட்கள்
பின், நண்பர்களுடன் இரவில் மழையில் நனைந்து பந்து விளையாடிய நாட்கள்

என அனைத்தையும் அசை போட்டு , இரவு உணவு முடிந்து நடக்கும் வயதான தம்பதியர் போல, நானும் என் மனமும் மழையை ரசித்து சிறிதும் பின் விளைவுகளை நினைக்காது ( கை பேசி நனைகிறது, பணம் நனைகிறது) முழுக் கால் சட்டையின் இரண்டு பக்க பைகளிலும் கை விட்டு வீர நடை போட்டு மழையில் நடந்து வந்து சேர்ந்தேன்.

மழையில் நனையும் போது உடலுடன் உள்ளமும் குளிர்ந்த திருப்தி.

அம்மாவின் தாலாட்டு, இளையராஜாவின் இசை, உண்மையான நட்புடைய நண்பனின் பேச்சு, நல்ல புத்தகம் , அனைத்தோடும் இதையும் இணைத்து பார்த்தேன்.

நிம்மதியான தூக்கம் வரும்.

No comments:

Post a Comment