கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Sunday, August 8, 2010

எனது கனவு

தேரில் பயணம், கிடைத்த வரை இடம் என எனது தேரில் எனது நண்பனும். அவனுக்கு ஆசையோ என்னவோ எனது சாரதியாக வருகிறானாம். எனது நண்பனை அவ்வாறு ஏன் சொல்ல வேண்டும். அவனுக்கு ஆசையாம் குதிரை ஓட்ட அதனால் அவனே எடுத்து கொண்டான் என்பதே சரி.

முல்லைக்கு தேரைத் தந்து, பின்னாடியே காவலாளியை அனுப்பி இருப்பான் அந்த பாரி. ஆனா நான் அப்படியில்லை. என் நண்பனுக்கு தேர் என்ன ஊரே குடுப்பேன். அது என்னோடதா இல்லாதவரை எனகென்ன கவலை.

வானவெளியில் மிதப்பது போன்று எனது தேர் பயணம். சுற்றிலும் விண்மீன்கள் கண் மூடி மூடி திறக்க வரும் சப்தம் இரைச்சலாக கேட்கிறது . மிக அருகில் இருப்பதாலோ என்னவோ.

எதிரில் நாராயணா நாராயானா என்று நாரதரும் செல்கிறார். செல்லவில்லை என்னகாரியமோ, நிற்கிறார் அவர்.

சில்லென்ற காற்று எனது முகத்தில் முத்தமிட்டு கொண்டே இருக்கிறது. வாயுப் பகவான் மகள் போலும் . இப்படி கொடுக்கிறாள் அள்ளி, வாய் வலிக்காதோ. நல்ல வேளை, வாயுப் பார்க்கவில்லை இல்லையெனில் புயலெனப் பாய்ந்திருப்பான் .

முத்தம் மட்டும் சபதமில்லாமல், சுகம். இதற்கிடையில் அது யாரது அழகான தேவதை என்னை நோக்கி வருகிறாள். வாயுவின் மகளை விலக்கி கொண்டு. கொள்ளை அழகு. தேவ கன்னிகையோ . இல்லை தேவ மாதா, கையில் குழந்தை இருக்கிறதே. எனக்கு அருள் பாளிக்க வருகிறாள் போல. கையில் அட்சயப் பாத்திரம் வேறு.

பின்னால் எல்லோரும் ஆரவாரம். எனது நண்பனைப் பார்க்கிறேன் . திரு திருவென முழிக்கிறான்.
"டேய், வண்டி மூவ் ஆகா மாட்டேன்குதுடா. சிக்னல் ல மாட்டிகிட்டோம். பின்னாடி எல்லாரும் இந்த கத்து கத்து கத்துறானுங்க. எதோ அருந்த பன்றி மாதிரி "

என்னை நோக்கி வந்த பிச்சைக்காரி வேறு, பைசா கேட்டு, பாத்திரத்தோடு தொந்தரவு. எதிரே நின்று " கிளம்பு கிளம்பு " என காவல்காரர்.

நானும் நானும்

சென்ற வாரம் 4.8.2010 தேதியிட்ட ஆனந்த விகடனில் கோபி நாத்தின் அறிவுரை "நீயும் நானும்" பக்கத்தில் வந்துள்ளது. அனைவரும் அறிந்த ஓன்று என்றாலும் சொல்லத் தகுந்தது.

ஆனால் கைப் பேசியை வைத்து வேற தலைப்பில் உரையாற்றி இருக்கலாம். நகைச் சுவையாகவாவது இருந்திருக்கும். நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கும் போது, ஒரு நண்பன், நண்பனுக்கு அழைப்பு விடுத்து நலமா, சாப்பிட்டாயா எனக் கேட்பது நேர விரயம் என்று அவர் சொல்வதை ஏற்க வேண்டாம் என முடிவெடுத்தாலும் அது ஒரு அபத்தம் என்பதை சொல்லாமல் இருக்க இயலாது.

ஒரு இளைஞன் நான்கு மணி நேரம் அமர்ந்து கைப் பேசியில் விரயம் செய்கிறான் என்பது சரி. வேறு என்ன காரியங்களுக்கு செய்கிறான் , தோழிகளிடம் கடலையா ? பார்க்கத் தகாத சிறு சிறு ஒளிப் படங்கள் வைத்து இருக்கிறானா ? இல்லை அவன் விளையாட்டுக்கு அடிமையா என்பது ஆராய வேண்டும்.

கடிதப் போக்குவரத்து குறைந்து கைப்பேசி வந்ததும் இரண்டு நிமிடமோ, இரண்டு மணி நேரமோ தனது கருத்தை, தனது தனிமையை, தனது நிலைமையை நிவர்த்திக்க எண்ணி நண்பனிடம் பேசும் ஒருவன், காரியமாகத் தான் பேச வேண்டும் என்பது மறுக்கத் தக்கது.

இது அவரது முன்னது கட்டுரைகளுக்கு எதிரானது . ஏதாவது காரியமாகத்தான் பேச வேண்டும் என்றால் , வாழ்க்கை இயந்திரமயமானதாகத் தோன்றாதா? பின் வாழ்க்கையை ரசிப்பது எவ்வாறு.

நான் பார்த்த காட்சியை, பெண்ணின் அழகை , நான் ரசித்து உண்ட உணைவை , நான் வாங்கிய புது பொருளை, கேட்ட பாடலை ஆயிரம் கல் தொலைவில் இருக்கும் எனது நண்பனுடன் பகிர முடிய வில்லை எனில் பயன் என்ன ?.

எனக்கு " into the wild " என்ற ஒரு ஆங்கிலப் படம் தான் நினைவில் வருகிறது . பகிராத எதுவும் சந்தோசத்தை தராது.

இந்த கருத்துக்கள் தொடர்ந்தால், அந்த பக்கங்கள் நீயும் நானும் ஆகா இராது; "நானும் நானும்" ஆகிவிடும் .