கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, June 21, 2010

மழை எனும் மந்திரம்


மழைக் காலமோ, வெயில் காலமோ, குளிர் காலமோ , தமிழ் நாட்டை விட வட மாநிலங்களில்தான் அதிகம் உணர முடிகிறது என்பது மிக சரியான வார்த்தை. கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து மழைக் காலம் ஆரம்பம் .

நமது ஊரை பொறுத்த வரை மழைக்காலத்திலும் ஒரு நாள் மழை , இரண்டு நாள் மழை மாத்திரமே தொடர்ந்து இருக்கும்.

ஆனால் வட மாநிலத்தில் கொடூரமான 48 பாகை அளவு வெயில் அடித்த மறுநாள், மழைக்காலம் என்றதும் மேகக் கூட்டம் எங்கிருந்து பயணித்ததோ தெரியவில்லை. முழுவதும் மூடியது. 16 ஜூன் ல் மூடிய வானம் இன்றும் திறக்க வில்லை. அதாவது சூரியனைக் கண் விழிக்க விடவில்லை.

வெளி நாட்டில் தொடர்ந்து விடுப்பில்லாமல் வேலை பார்த்து கிடைத்த இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு வந்த ஒருவன் மனைவியைக் கண்டதும் ஆவலுடன் வீட்டுக்குள்ளேயே கொஞ்சி விளையாடுவதைப் போல, கடுமையான வெப்பம் எனும் ஆற்றல் முழுவதும் வெளியேறியதும் சோர்ந்து வீடு திரும்பி இரண்டு மூன்று மாதம் விடுப்பில் வீட்டுக்குள்ளிருந்து வெளி வருவதில்லை சூரியன், வட மாநிலங்களில்.

நமது ஊரில் சூரியனுக்கு அரசு வேலை. நிறைய விடுமுறை. அதனால் ஒரு நாள் வெளியில் வருவான். மறு நாள் வீட்டுக்குள் இருப்பன். சுக வாழ்க்கை.

துவைத்த துணி காயாது, வெளியில் சென்றால் அனைத்தும் நனையும் என்பதெல்லாம் இருந்தாலும் , மழை என்ற உணர்வு மகிழ்ச்சியை மட்டுமே தருகிறது.

இன்று இங்கு கடுமையான மழை தொடர்ந்தது. மனதில் சிறு உந்துதல். சிறிது காலாற நடக்க எண்ணினேன் தனியாக நனைந்து கொண்டு.

சிறு வயதில் மழையில் நனைந்து வீட்டில் அம்மாவிடம் அடி வாங்கிய நாட்கள் ,
பள்ளி நாட்களில் மழையில் வேகமாக மிதிவண்டி மிதித்து நண்பனுடன் போட்டியிட்ட நாட்கள்
கல்லூரியில் மழையில் தோழியுடன் நடந்த நாட்கள்
பின், நண்பர்களுடன் இரவில் மழையில் நனைந்து பந்து விளையாடிய நாட்கள்

என அனைத்தையும் அசை போட்டு , இரவு உணவு முடிந்து நடக்கும் வயதான தம்பதியர் போல, நானும் என் மனமும் மழையை ரசித்து சிறிதும் பின் விளைவுகளை நினைக்காது ( கை பேசி நனைகிறது, பணம் நனைகிறது) முழுக் கால் சட்டையின் இரண்டு பக்க பைகளிலும் கை விட்டு வீர நடை போட்டு மழையில் நடந்து வந்து சேர்ந்தேன்.

மழையில் நனையும் போது உடலுடன் உள்ளமும் குளிர்ந்த திருப்தி.

அம்மாவின் தாலாட்டு, இளையராஜாவின் இசை, உண்மையான நட்புடைய நண்பனின் பேச்சு, நல்ல புத்தகம் , அனைத்தோடும் இதையும் இணைத்து பார்த்தேன்.

நிம்மதியான தூக்கம் வரும்.

இலக்கியம்

தலைவன் ஒருவன், தன் தலைவியின் பிரிவாற்றாமையால் பாடிய ஒரு குறுந்தொகை (ரூ 100 ) ; நெடுந்தொகை (ரூ. 1000 ) பாடல் ,

நீ
என்னைப் பிரிந்தாய் ;
காப்புக்கு போடும் ஜட்டி யானாலும் (கு.தொ)
காசுக்குப் போடும் குட்டி யானாலும் (நெ.தொ)
எதைத் தொட்டாலும்
பிரிய வில்லை உன் நினைப்பு ..

- புலவர் இராஜராஜன்

Friday, June 18, 2010

ஒரே ஒரு ஒப்பம்


ஒரு அரசு அலுவலகத்தில் கையொப்பம் வாங்க வேண்டிய வேலை. சரி, ஒரு நாளில் வாங்கி விடலாம் என்று ஒரு நாள் விடுப்பு எடுத்து கொண்டு காலையில் அவசர அவசரமாக கிளம்பி, அவசரத்தில் காலையில் எப்பொழும் சுவைக்கும் காபி , செய்தித் தாள் மறந்து, கூட்டம் சகிக்காத 23c பேருந்தில் ஏறி, சில்லறை இல்லாமல் அசிங்கமாக சென்னைத் தமிழில் நடத்துனரின் திட்டும் வாங்கி, மற்றவர்கள் மத்தியில் அசிங்கத்தைக் காட்டாது இருக்க, வழிய ஒரு சிரிப்பை வரவழைத்து வியர்வை நாற்றத்துடன் இறங்கும் பொழுது காலை 9 .30 .


அப்பாடா 10 மணிக்கு முன்பாக வந்து சேர்ந்தோம் என மகிழ்ச்சியில் அந்த அலுவலகத்தில் நுழைந்தேன். அந்த பியூன் என்னை ஏற்றம் இறக்கமாக பார்த்தான். புரியவில்லை.

10 மணி ஆனதும் எல்லோரும் உள்ளே வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டதே என சிறு வேகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களைத் தொந்தரவு செய்வது நன்றாக இருக்காது என எண்ணி சற்று வெளியே இருக்கலாம் என நேரங்கடத்த , வெளியில் வந்தேன்.

திடீரென காலையில் காய்கறி வாங்கி கொடுக்க மறந்தது ஞாபகம் வர, அம்மாவுக்கு தொலைபேசியில் அழைத்து பேசி விட்டு , அப்படியே ஆபீசிலும் என்ன நிலவரம் என தெரிந்து கொண்டு ஒரு தேனீர் கடையில் நேரம் கடத்தி கொண்டு இருந்தேன்.

மணி இப்போது 10 . 15 , இன்னும் 10 நிமிடம் போகட்டும் என எண்ணி தினத் தந்தியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பை ரசித்தேன். ( என்ன மனிதன் நான் ?) .
10.25 . இப்போது எல்லோரும் அமைதி ஆகி இருப்பார்கள் என்று எண்ணி உள்ளே சென்ற எனக்கு முதல் திகைப்பு எதிர்பார்த்த அமைதி இருந்தது. ஆனால், யாருமில்லாத அமைதி. என்னையே ஒரு முறை கேட்டுப் பார்த்தேன் இன்று ஞாயிறோ என்று. இல்லை.

பியூனை கேட்டேன் . " அய்யே, மணி இன்னா இப்போ பத்தரைதானே , வருவாய்ங்க. போயி அங்க குந்து " என்ற பதில். திகைப்புடன் அமர்ந்தேன்.

10 . 45 .. ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்தார்கள். யாருக்குமே பதற்றம் என்பது சிறிதும் இல்லை. நான் பார்க்க வேண்டிய ஆளும் வந்தார். உடனே செல்லாமல் 5 நிமிடம் கடந்து செல்ல நினைத்து எல்லோரையும் நோட்டம் விட்டேன். யாரிடமும் பதற்றம் இல்லை. எல்லோர் கையிலும் செய்திதாள்களும், வார புத்தகங்களும். பெண்களிடத்தில் வார மலர் , குடும்ப மலர். தவிர மறந்தும் யாரிடமும் கோப்போ, பேனாவோ இல்லை. பின்னர் ஒரு வேலை முடிய வருடக் கணக்கு ஏன் ஆகாது என என்னை கேட்டுக் கொண்டே, அவரிடம் சென்றேன்.

அப்போது வெளியில் இருந்த பியூன் சொன்னான்.
"மணி 11 . தேனீர் இடைவேளை"... வந்து 5 நிமிடத்தில் இடைவேளை. எப்போ முடியும் எனக் கேட்டேன். அவன் சொன்னான் " அரை மணி நேரம் என்று".. கடியாக 11 .30 க்கு உள்ளே சென்றேன். அடுத்த 5 நிமிடத்தில் அவர் வந்தார். அவரிடம் சென்ற போது ஒரு பத்து நிமிடம் கழித்து வாருங்கள் வேலை இருக்கிறது என்று சொன்னார் . எதிர் பார்த்த பதில் தானே. சென்று அமர்ந்தேன். 15 நிமிடத்தில் உள்ளே சென்ற போது , வாங்கி பார்த்து கொண்டே என்னங்க இது இப்படி வந்து வேலையில தொந்தரவு பண்றீங்களே என்று நொந்து கொண்டார் ... உண்மைதான்

அப்புறம் தான் நடந்தது காமெடி. கேட்டாரே பார்க்கலாம் , ஏங்க, உங்க பாட்டனார் இறந்ததா சொல்றீங்களே எப்போ இறந்தார் ?... நானும் சொன்னேன் ஒரு 25 வருடம் இருக்கும். அப்போ அவரோட இறப்பு சான்றிதழ் எடுத்துட்டு வாங்கன்னார்.அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

இன்னுமொரு சான்றிதழில் ஏன் பெயரில் பின்னால் அப்பாவின் முதல் எழுத்துக்கு பதில் முன்னாடி இருந்தது. இது இரண்டும் நீங்கள்தான் என எழுதி வாங்கி வர சொன்னார் .
சரி, மற்ற சான்றிதழ்களையும் காட்டி அவரிடம் ஏதும் குறை இருந்தால் சொல்ல சொன்னேன். அவர் " இல்லைங்க, இப்போ லஞ்ச் டைம் ஆச்சு " நீங்க சாயந்தரமா வாங்க.

மதியம் 4 மணி வாய் அவர் லஞ்ச் முடிஞ்சு வர வில்லை. யாருமே வர வில்லை. பியூன் சொன்னான் " நீங்க நிக்கிறது வேஸ்ட் ங்க. வருவாங்க ௧௦ நிமிடத்துல "டி" ன்னு போவாங்க. 5 மணி க்கு வருவாங்க , வீட்டுக்கு கிளம்ப பாப்பாங்க."

திட்டிகிட்டே வெளியே வந்தேன்

இதுதான் நடந்ததுன்னு ஏன் நண்பன்கிட்ட சொன்னா அவன் சொல்றான் " அதுக்குதான்டா கால் காசானாலும் கவர்மென்ட் காசு திங்கனும்கிறது ன்னு " . அப்போ அவனுக்கும் அங்க போயி வேலை செய்யலாம்ன்னு எண்ணம் இல்லை.

அப்புறம் யாரை குறை சொல்வது சொல்லுங்க .

கவலை

சிறு வயதில் சிறு கல்லையோ , ஒரு காசையோ எடுத்து கொண்டு ஓடி , ரெயில் தண்டவாளத்தில் வைத்து ரெயில் ஓடியதும் ஓடி சென்று அந்த மெலிந்த காசைக் கொண்டு விளையாடுவது வழக்கம்.

தற்போது நான் அவ்வாறு செய்ய முயலுவேனானால் என்னைக் கைது செய்தார்களா என்றே என் வீட்டுக்குத் தெரியாது . அந்த அளவுக்கு நிலை தலைகீழ்.


இதிலும் கொடுமை என்னவென்றால் நாம் சுதந்திரம் சுவைத்து இப்பொழுது 60 ஆண்டுகள் தான் ஆகிறது. இப்போதே நம்மை மீறும் செயல்கள் தொடங்கியது என்றால், இன்னும் எத்தனை ஆண்டுகள் பக்கத்து வீட்டுக் காரனை நம்ப இயலும் என்றே தெரிய வில்லை. பக்கத்து காரர்களோடு ஒட்டி உறவாடிய நமது கிராமங்களிலும் இதே நிலைதான்.

அன்பு, நம்பிக்கை என்ற சொல்லை தமிழ் அகராதியில் தான் பார்க்க இயலும் என்பது துக்கத்துக்குரியது. எந்த செயலிலும் கவலை என்றால் மனிதனின் நிலை ?


ரெயில் பயணம் என்றால் வெடிகுண்டு கவலை !
லாட்ஜில் தங்கலாம் என்றால் கேமரா கவலை !
சுற்றுலாத் தளங்களில் எங்கு எப்பொழுது வெடிக்குமோ எனக் கவலை !
பக்கத்து சீட்டுக் காரன் எப்போது நம்மை கவிழ்ப்பான் என்று அலுவலகத்தில் கவலை !
எந்த மினனஞ்சலில் வைரஸ் வருமோ என அதை திறக்க கவலை !
தியேட்டர் சென்றால் இடிந்து விழுமோ எனக் கவலை !
தூங்கும் பொழுது காலை எழுவோமா எனக் கவலை !



எதுக்கெடுத்தாலும் கவலை , எதை எடுத்தாலும் கவலை !!

Wednesday, June 9, 2010

இளைஞர்களே வாருங்கள் !!!

அதுவும் ஒரு கட்சி என்று அதைப் பற்றி ஒரு பதிவு எழுதுகிறான் என்று நினைக்க வேண்டாம். இன்று செய்தித் தாளில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம் . பா.ம.க விற்கு முடிவு எடுப்பதில் குழப்பமாம் . எதற்கு என்கிறீர்களா ? தி.மு.க வுடன் கூட்டணி அமைப்போமா வேண்டாமா என்றுதான்.

சில நாட்களுக்கு முன்னால் இதே பா.ம.க , தங்களின் முதல் எதிரி தி.மு.க என்றது. இது என்ன தமிழ்நாட்டு அரசியலில் புதுசா என்கிறீர்கள். ஆம். புதுசில்லைதான். ஆனால் இவ்வாறாக பேரம் பேசி கூட்டணி வைத்து, மாறி மாறி பேசி, இவர்கள் அரசியல் நடத்தும் கொடுமையை இப்படி அப்பட்டமாக செய்யும் அளவுக்கு அனைவரையும் முட்டாள் என நினத்திருக்கின்றனர்.

நாம் இருக்கட்டும், நம்மில் பலர் பா.ம.க விற்கு ஒட்டு போடப் போவதில்லை. அந்த வன்னியர் இனம் இன்னும் விழிக்க வில்லையா. இந்த பேரம் நடப்பது அந்த இனத்தின் உரிமைக்கா ? அந்த இனத்திற்கு வேண்டிய சலுகை வேண்டியா ? இட ஓதிக்கீடா ? இல்லையே !!

திருமிகு பாசமானவருக்கு எம்.பி பதவியும் , மந்திரி பதவியும் கிடைக்காதாம். அதனால், முடிவு எடுப்பதில் குழப்பம். இந்த தி.மு.கழகமும் அவர்கள் 2011 ல் கூட்டணியில் இருப்பதை வைத்து இடம் எனத் தெளிவாக பேரம் பேசுகிறது.

இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் , இந்த இடத்தில் குழப்பம் எனில் பா.ம.க உறுதி செய்ய வில்லை 2011 ல் யாருடன் கூட்டணி என்று. அப்படியானால் கூட்டணி மக்களுக்காகவோ, சாதி நலனுக்காகவோ, நாட்டு நலனுக்கோ, இல்லை, சேருமிடத்தின் கொள்கை பிடித்தோ இல்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது.

கொள்கை என்பது பேச்சளவில் தான் போலுள்ளது.
ஒரு சிறு கதை :

இரண்டு சிறு கிராமம், இரண்டும் வறண்ட பகுதி என்பதால் மற்ற பகுதிகளை கொள்ளை அடிப்பதுதான் அவர்கள் தொழில். எல்லாப் பகுதிகளையும் கொள்ளை அடித்த பின்னர் அந்த இரண்டும்தான் மிச்சம். இரண்டுக்கும் தெரிந்தது இரண்டு மட்டும்தான் மிச்சமென்று. ஒடுங்கியத் தலைவன் ஒன்கியத் தலைவனிடம் சொன்னானாம். எனது ஊரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எனது வீட்டை விட்டு விடு. எனது மகனுக்கு திரும்பவும் தலைவன் பதவியைக் கொடு . அவன் மற்றதைப் பார்த்துக் கொள்வான் என்று. கிராமம் கொள்ளையடிக்கப் பட்டது. அந்த கிராம மக்கள் அனைத்தையும் இழந்தனர். மகன் தலைவனானான் . உச்ச ஸ்தானியில் ஒலித்தது " வாழ்க " எனும் அந்த மக்களின் கூச்சல்.

சீமான் சொன்னது போல் , படித்தவன் வரும் வரை பொறம்போக்குகள் தான் நிரப்புவார்கள்.

Tuesday, June 8, 2010

தி பக்கெட் லிஸ்ட் (2006)

2006 ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம் .





ஜாக் நிகல்சன் மற்றும் மோர்கன் ப்ரீமன் நடித்த படம் . இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் வாழ்க்கையில் எதையோ இழந்த மாதிரியும் , வாழ்கை என்பது எது என்பது புரிந்தும் புரியாத மாதிரி ஒரு உணர்வு. இயக்குனர் ரோப் ரேயநேர் க்கு வெற்றி .

மிக சிறந்த படங்களில் ஓன்று என்றே தோன்றுகிறது . விஜய், அஜித், சிம்பு, தனுஷ் படங்களில் வசனம் சிறிது அதிகமானாலும் அலறி ஓடும் நமக்கு படம் முழுக்க வசனம் இருந்தாலும் ரசிக்க இயலும் என உணர்த்தும் நேர்த்தியான திரைக்கதை ; ரசிக்கத் தகுந்த காட்சியமைப்பு ; இயல்பான நகைசுவை வசனங்கள் என உயர்தரமான சிந்தனைகளின் ஒட்டுமொத்த படைப்பு இந்த படம்.

"nobody is perfect " என வசனம் பேசும் இரண்டு ஜாம்பவான்களின் நடிப்பில் ஒரு perfection குன்றின் மேலிட்ட விளக்காய் தெரிகிறது . காட்சி அமைப்புகளில் திறம்பட செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

முடிந்த வரை இந்தியா முதல் கொண்டு எல்லா ஊர்களையும் சுற்றி காட்டுகிறார்கள்.

கதை என்று சொன்னால் தலைப்புக்கேற்ற மாதிரி ஒரு பக்கெட் லிஸ்ட் அதாவது இறக்கப் போகும் ஒருவர் இறுதி ஆசைகளை எழுதி செய்ய நினைக்கும் ஒரு பட்டியல் . அதை செய்து முடிக்க நினைக்கும் இரு முதிர்ந்த புற்றுநோயாளிகளின் கதை.

நிகல்சொனின் ஆசைகளில் ஒன்றான அழகிய பெண்ணை முத்தமிடுதல் எனும் முதல் ஆசை இறுதியில் நிறைவேறுவது நெஞ்சைத் தொடும் எளிய காட்சி.

இவ்வாறாக அனைத்து விதங்களிலும் பார்க்கத் தகுதியான படம். இதைத் தங்களின் bucket list ல் ஒன்றாக வைக்காமல், விரைவில் பார்க்க.

Friday, June 4, 2010

நானும் அறிக்கை விடுறேன்

மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலர், ஜெயக்குமார் அவர்கள் அறிக்கையில் கூறிய விஷயம் " போலீஸ்காரர்களின் ஓட்டு தி.மு.க விற்கு இல்லை".

இவர் உரையை தயாரித்து சரி செய்துதான் பேசுகிறாரா. இல்லை வாயில் வருவதுதான் இவரது உரையா என எனக்கு ஐயம்.

இதை தெரிவிக்கும் போது , மற்றவர்கள் அவர்களுக்குதான் ஓட்டு போடுவார்கள் என்கிறாரா.
தனது அ.தி.மு.க விற்கு எப்படி ஓட்டு கேட்பது என்பதை விட்டு அவர்களுக்கு யாரெல்லாம் போட மாட்டார்கள் எனக் கூறுவது தி.மு.க வின் பலத்தை அல்லவா கூறுவதாய் உள்ளது. இன்னொன்று , இதை தி.மு.கழகத்துக்கு அறிவித்து அவர்கள் போலீஸ்காரர்களை கவனிக்க வழி செய்யும் எச்சரிக்கையாய் உள்ளதாய் தோன்றவில்லையா.

வடிவேலு ஸ்டைலில் " நானும் அறிக்கை விடுறேன், நானும் அறிக்கை விடுறேன் " விடுறார் போல.

இவர்கள் எல்லாம் இப்படி அறிக்கை விடுவதால்தான் 87 வயதிலும் கட்சியை வளர்க்க நான் இன்னும் இளைஞன் என்கிறார் கருணாநிதி.

திருமிகு கருணாநிதி அவர்களுக்கு,

முட்டாள்களின் மத்தியில் சாணக்கியன் என்று உங்களை சொல்ல மாட்டேன்.
ஆனால் , முட்டாள்களை முட்டாள்களாகவே வைத்திருக்கும் சாணக்கியம் உங்களுக்கு உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

அது இருக்கட்டும், ; இன்றும் நான் கட்சியை வளர்க்கும் பொருட்டு இளைஞன் என சொல்லும் போது ஸ்டாலின் தங்களை முறைத்ததாய் எனக்குத் தோன்றுகிறதே.

Wednesday, June 2, 2010

போம் யெஒரெஉம் கஐல் க்யெஔல் குறிகோ போம்

ஸ்ப்ரிங், சம்மர், பால், விண்டேர் அண்ட் ஸ்ப்ரிங்

என ஆங்கிலத்தில் அதன் தலைப்பை மொழி பெயர்க்கலாம்.

கொரியன் திரைப்படம். என்னை மிகவும் பாதித்த என்றே தொடங்க வேண்டும்.

கி-டுக்-கிம் என்பவர் எழுத்தும் இயக்கமும் நடிப்பும். ஆனால் நடிக்க வில்லை, இயக்க வில்லை, எழுதியும் இருக்க வில்லை. செதுக்கி இருக்கிறார் என்று சொன்னாலும் மிகை ஆகாது.

திரைப்படத்தின் துவக்கம், ஒரு பள்ளத்தாக்கின் நீர்நிலைக்கு நடுவே உள்ள ஒரு அழகான குடிசையின் முகத்தே. அந்த காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை கேமரா அப்பப்பா அருமை, அழகு, அற்புதம், இன்னும் என்னன்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும். நான்கு காலத்தையும் காட்டும் இந்த அற்புதம் அவருக்கு உதித்தது நமது கண்களுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

புத்த கொள்கைகளில் பிறலாத ஒரு புத்த துறவியின் கதை.

புத்த கொள்கைகளில் ஊறிய இயக்குனர் என்பதை கதைப் பாத்திரங்களுக்கு பெயர் வைக்காதது முதல் தெரியப் படுத்துகிறார். படத்தில் வரும் இரு காவல் காரர்களைத் தவிர யாருக்கும் பெயர் இல்லை.

தலைப்புக்கு ஏற்ற மாதிரி படம் வசந்த காலத்தில் ஆரம்பம். கல்லால் செய்யப பட்ட புத்தர் சிலை. புதுப் பெய்ன்ட் அடித்து நமக்கு சாமி படம் காட்ட வில்லை.

சாங் ஹோ ஹிம் என்ற அந்த சிறுவனைப் பல படங்களில் பார்த்து இருக்கலாம். நடிப்பில் அற்புதம். சிறுவனுக்கே உள்ள சேட்டைகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறான். பாம்பு, தவளை, மீன்களில் கல்லைக் கட்டும் போது சிரிப்பதும், அதை முதியவர் உணர்த்த , வந்து இறந்து கிடப்பதை பார்க்கும் போது அழுவதும் அழகு.

பிறகு ஒரு கோடைக் காலத்தில் அவன் இளைஞனாக காட்டப் படுகிறான். பெண் வாடையே இல்லாதிருந்தாலும் வயதில் காம உணர்வு இயற்கையானது என்பதை பாம்புகளின் புணர்ச்சியை பார்க்கும் போது அவனுள் மாற்றத்தை காட்டி அசத்துகிறார். அந்தக் கோடையில் ஒரு இளம்பெண் உடல்நிலை சரிப் படுத்த வேண்டி அங்கு அம்மாவுடன் வருகிறாள். அம்மா அவளை துறவியிடம் ஒப்புவித்து கிளம்புகிறார். இளைஞன் மற்றும் அந்த இளம்பெண் இடையேயான தனிமை உடலுறவு கொள்ள செய்கிறது . அதை அறிந்த அந்த துறவி உணர்ச்சிவசப் படாமல் இது இயற்கை, இதுதான் மருந்து எனும் பொழுது உலகின் மிகப் பெரிய உண்மையை யதார்த்தமாக சொல்லி விடுகிறார் இயக்குனர்.
அவளைப் பிரித்து அழைத்து செல்லும்பொழுது இளைஞன் கோபம் கொண்டு அவளுடைய ஊருக்கு செல்கிறான்.

அவன் செல்கிறான் ஆனால் கேமரா நகரவில்லை.

அந்த துறவியிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. அவரது வழக்கம் தொடர்கிறது.

திரும்ப கால மாற்றம். ஒரு மழைக்காலம்.
துறவிக்குத் துண்டு பிரசுரத்தின் மூலம் தெரிய வருகிறது அந்த இளைஞன் (இயக்குனர்) அவன் மனைவியைக் கொலை செய்து விடுகிறான் என்று. அங்கும் அமைதி. அவன் மீண்டும் இந்த இடம் தேடி வருகிறான், அதே கோபத்தோடு. கோபம் அவனைத் தற்கொலை முயற்சிக்கு தூண்ட அப்போது துறவி அவனுக்கு பொறுமையை புரிய வைக்கிறார். காவல் காரர்கள் அவனைக் கைது செய்து அழைத்து செல்ல வருகிறார்கள். அந்த இளைஞன் திரும்பி பார்க்கும் வரை அந்த படகு முன்னேற மறுக்கிறது .
புத்த பிட்சுகளின் வழக்கப் படி அவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்கிறார்.
அந்த முதிர் துறவியின் (இயங் சு ஒத் ) நடிப்பும், அவரது பாத்திரப் படைப்பும் படம் பார்த்த ஒரு எண்ணத்தை விரட்டுகிறது; புத்த பிட்சுவாகவே வாழ்கிறார்.

கால மாற்றம் . ஒரு பனிக் காலம் :
அவன் மீண்டு வருகிறான். அவனிடம் அமைதி. அவன் துறவி ஆகிறான். சிறிது நாட்களில் அவனிடம் ஒரு பெண்மணி வந்து ஒரு குழந்தையை ஒப்படைத்து செல்லும் பொழுது இறக்கிறாள். அந்த குழந்தை இவனுடையது. இயக்குனர் கிம் டுக் கிம் நடிப்பிலும் அசத்தல் .

கால மாற்றம் , ஒரு வசந்த காலம் :
மீண்டும் அந்த சிறுவன், மீன்களுடன், தவளையுடன், பாம்புகளுடன் விளையாட்டு.
சுபம்.

இந்த தலைப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு என நோக்கும் போது மனிதனின் இயல்புகளையும், காலத்தையும் மிக அழகாக ஒப்புமை செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
  • வசந்த காலம் : இளம் பருவம், கவலை தெரியாத பருவம்,
  • கோடைக் காலம் : மனித உணர்ச்சிகளின் அப்பட்டமான வெளிப் பாடு
  • மழைக் காலம் : மனத்தின் முதிர்வு
  • பனிக் காலம் : பொறுமை , எனக்குத் தெரிந்த வரை இது . இன்னும் இருந்தால்பின்னூடங்களில் தெரிவியுங்களேன்

கண்டிப்பாக அற்புதமான , எளிமையான, அழகான, நேர்த்தியான, நம்மை தொடுகின்ற படைப்பு