கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Saturday, May 29, 2010

All is well

நண்பனே,
மேகக் கூட்டத்துக்கு நடுவில் இருக்கிறாய்
நிரம்ப மகிழ்ச்சி வேண்டாம்
உன்னை அது கடந்து போகும்
மிகுந்த கவலையும் வேண்டாம்
கவலையும் விரைவில் கடக்கும் ;

பலூன் ஒன்று வானிலேயே மிதக்க
மேல்நோக்கி ஊதும் குழந்தை போல
உனது வாழ்நாளும் நாட்களாய் நீடிக்க
என்றும் நீ சிரிக்க !!

நல்லது ஒன்றுமில்லை
கெட்டது என்றுமில்லை
உண்மையே பேசு - பிறருக்கு
உதவியே வாழ்

பிழை என்பது இல்லவே இல்லை
உன் அகராதியில் - ஏனெனில்
நீ ஒரு ஆள்
all is well


- பெருங்கவிஞர்

Friday, May 28, 2010

பொது நலப் பிரச்சினை

இந்த ஆந்திராவில் மட்டும் எதாவது பிரச்சனைன்னு சொன்னால் எதுக்காக அது என்று பல முறை யோசிக்க வேண்டியுள்ளது. 25 மே அன்று எனது சொந்த வேலையின் பொருட்டு சென்னை செல்ல வேண்டியிருந்தது. மீண்டும் கிளம்பும் வேளையில் நடந்த நிகழ்வு :-
இரண்டே நாளில் 1200 km பயணம்,
பயணம் ரயிலில், 27 மே அன்று இரவு 11 .25 க்கு சென்னையில் துவங்க வேண்டிய பயணம் 30 நிமிடம் தாமதம். அது வழக்கம் தானே என்று ஒன்றும் சொல்ல இயலாமல் ஏறி அமர்ந்தேன் .
அடுத்த நாள் காலையில் ஆந்திராவில் வாரங்கல் ஐத் தொடும் தூரத்தில் உள்ள ஊர் மகாபுபாபாத். அந்த ஊரில் திடீரென ரெயில் நின்றது. ஒரு மணி நேரம் , இரண்டானது , மூன்றானது எடுக்க வில்லை. இறங்கி எட்டிப் பார்த்தால் தொடர் வண்டியின் கடைசிப் பெட்டியை, அங்கிருக்கும் சில மாக்கள், (மன்னிக்கவும் எழுத்துப் பிழை). மக்கள் சிலர் கல்லால் அடித்தப் படியும், துப்பாக்கியால் சுட்டப் படியும் இருந்தனர்.
என்ன எது என்று ஒன்றும் புரிய வில்லை .
வண்டியின் உள்ளே விவாதம் தொடங்கியது. பிரச்சினை என்னவாக இருக்கும்.
$ நக்சலைட் தொல்லையாக இருக்குமோ என ஒரு சாரார்.

$ அரசியல் பிரச்சினையாக இருக்கும் என ஒரு சாரார்.
$ தெலுங்கானா பிரச்சினையாக இருக்கலாம் என ஒரு சாரார்
$ முன்னணி ஹீரோவின் படம் நன்றாக ஓட வில்லை என்பது கூட காரணமாக இருக்கலாம் என ஒரு சாரார்.
$ பொழுது போகாமல் இருக்கலாம் என ஒரு சாரார்.
இறுதியில் எனக்கு மாலை தொலைக்காட்சி செய்திகள் பார்த்ததும்தான் தெரிய வந்தது அது ஒய் எஸ் ஆர் மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்று.

என்னுடம் பயணம் செய்தவர்கள் பற்றிய விவரம் ,
*ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியிருந்த குடும்பம். ( 9 மணிக்கு திருமணம், இங்கு மணி 12 .30 மதியம். )
*வயதான முதியவர் ஊருக்கு போக வேண்டி.
*ஒருவர் வேலைத் தொடர்பான நேர்முகத் தேர்வுக்கு போக எண்ணி .

இன்னொரு 25 வயது இளைஞனுக்கு மட்டும் சந்தோசம். ஏனென்றால் அந்த அறையில் உள்ள 16 அல்லது 17 வயது உள்ள ஒரு பெண்ணுடன் கண்களால் பேசிக் கொண்டிருந்தான்.

moral of this post :
அந்த இளைஞன் கெட்டிக் காரன்

Friday, May 21, 2010

தனிமை

பி யு சின்னப்பா காலத்தில் ஒரு மாடம், மாடத்தின் ஊடே செடி கொடிகள். அதன் வழியே பார்த்தால் நிலா.
சிவாஜி கணேசன் காலத்தில் வெளியுலகம்; கடற்கரை மணல், கடல் அலை, தூரத்தில் தெரியும் கப்பல்.
ரஜினி காலத்தில் குளிர் அரை , படுக்கை, அந்த அறையின் ஓவியங்கள், படுக்கை விளக்கின் பக்கத்தில் ஒரு தனித்த பெண்ணின் பொம்மை.
தற்போது நமது காலத்தில் என் தனிமையை உணர்த்த எனது கைப்பேசி ; .

நான் சென்னை வாசியாக இருந்த வரையில் தினமும் 10 சிறு செய்திகளை எனது கைப்பேசியிலிருந்து நீக்கினால் மட்டுமே அடுத்த செய்திகள் வரும். அந்த அளவுக்கு தொடர் செய்திகள் என்னைத் தொடர்ந்து வந்தன. ஆனால் நான் சென்னையை விட்டு நீங்கியதும் 7 மாதங்களாக தன்னுடைய வாடிக்கையாளன் என எனக்கு நினைவுப் படுத்த வேண்டி வரும் ரிலையன்ஸ் செய்திகளை தவிர எனக்கு எந்த செய்திகளும் நண்பர் கூட்டங்களிடமிருந்து வருவதில்லை. எனவே எனது கைப்பேசி இப்போது அனாதையாக எந்த செய்திகளும் இல்லாமல் எனக்குத் தனிமையைத் தெரிவிக்கிறது.
காரணம் இலவச வசதி இல்லை என்றாலும் வரவில்லை என்பதே உண்மை.... மற்றுமொரு உண்மை :- தொலைதூர அழைப்பு என்பதால் எனக்கு அழைப்புகளும் வருவதில்லை.
என்னே தனிமையின் கொடுமை.

Monday, May 17, 2010

சோவுக்கு கடிதம்

அன்புடைய திருமிகு சோ அவர்களுக்கு,

பண்புடன் எழுதும் கடிதம். நலம். தங்கள் நலமறிய அவா. நான் தங்களின் பரம ரசிகனாக இருந்தேன் என்றே சொல்லலாம். தங்களது இயல்பான நகைச்சுவை, பேச்சு நடையில் மகிழ்பவன். பல முறை என் நண்பர்களிடம் தங்களைப் பற்றி வாதாடி இருக்கிறேன்.
நிற்க
இந்த வாரம் தங்களின் "துக்ளக்" வாங்கிப் படித்தேன், ஒரு எதிர் பார்ப்போடு. (19 .05 .2010 அன்றுக்கானது. மேலும் ரூபாய் 8 .) படிக்க ஆரம்பித்ததும் தங்களின் மீது மதிப்பு கொண்டமைப் பற்றி என்னையே நான் ஒரு முறை கேட்டுக் கொண்டேன். முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை உங்களின் மரக்கிளைகளில் உள்ள இலைகளிலிருந்து காற்று அடித்ததே தவிர பத்திரிக்கையாளனுக்கான அழகு தெரியவே இல்லை. வருந்துகிறேன்.

முதல் பக்கத்தில் அம்மாவின் படம், அடுத்து அம்மாவின் அறிக்கைகள், அடுத்து அம்மா எதுவும் செய்ய வில்லை என்பதால் அந்த இடம் காலியாக விடாது, தாங்களாகவே ஆளுங்கட்சியை ஏசத் தொடங்கி விட்டீர்கள் போல. செந்தமிழ் மாநாட்டுக்கும், நிலக்கரித் தன்மை குறைப் பாட்டுக்கும் ஆளுங்கட்சியைக் குறை சொல்லி ஆகிவிட்டது. பின்னர் அபத்தத்தின் உச்சம் ஒரு பேட்டி வடிவில். அடுத்த இதழில் அக்னி வெயில் தாங்க வில்லை, மழை இல்லை. பேருந்தில் உள்ளே காற்று வர வில்லை. இறுதியாக எனக்கு கக்கா வர வில்லை. இது எல்லாவற்றிக்கும் காரணம் இவரின் ஆட்சிதான் என்பது கண்டிப்பாக இருக்கும். (எதிர் பார்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் இனி அந்த பக்கமே போக விரும்ப வில்லை)

நான் ஆளுங் கட்சிக்கு சாதகமானவன் இல்லை. விமர்சிக்க வேண்டாம் என்றும் சொல்ல வில்லை. தங்களது விமர்சனத்தில் ஒரு தரம் இல்லை. புத்தகத்தை கீழே கொண்டு சென்று துடைக்கத் தூண்டுகிறது. கேள்வி பதில்களிலும் அபத்தமே மிஞ்சுகிறது.

எனது ஆதங்கம் என்னவென்றால் இத்தனை வருடம் பத்திரிக்கை நடத்தும் தங்களுக்கு இன்னும் தர்மம் தெரிய வில்லையா. இல்லை உங்களவா களுக்கே உள்ளதா இது.

இதுவரை ஆயிரக் கணக்கில் செலவு செய்திருந்தாலும் இந்த 8 ரூபாயை செலவு செய்தது எனக்கு மிகுந்த வெட்கத்தைத் தருகிறது. பிச்சைக்கரர்களிடம் கொடுத்திருக்கலாம். உண்டு புகழ் பாடி இருப்பார்கள்.

உங்களது பத்திரிக்கையை வெளி உலகத்துக்கு விடாது உங்களவா க்குள் படிக்க வேண்டுகிறேன். மேலும் எனது உறுதிமொழி இதோ : இனி எக்காரணம் கொண்டும் தங்களது துக்ளக் வாங்குவதில்லை .படிப்பதில்லை.

இதற்க்கு பின்னூட்டங்கள் இருக்கலாம் " உன்ன யாருடா அவர மதிக்க சொன்னதுன்னு " . தவறு செய்ததை ஏற்கிறேன்.

Saturday, May 15, 2010

கறுப்பு பணம், வெளுப்பாகிறது

ஒருவருக்கு தன்னிடமுள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தை வெளுப்பாக்க வேண்டுமென்றால்,
அவர் இப்படித்தான் செய்கிறாராம்.

முதல் படி, தன்னுடைய மச்சானை அழைப்பார்.
இரண்டாவது, அவரை நகைக் கடை ஒன்றுக்கு அனுப்புவார்.
மூன்றாவது, மச்சானும் அங்கு சென்று 10 தங்கக் கட்டிகளை வாங்குவார். ஒன்றின் விலை 10 இலட்சமாக இருக்கும். அதற்குப் பதிலாக இவர் ஒரு கோடிக்கான காசோலை ஐ கொடுத்து செல்வார்.
நான்காவது, மச்சான் தற்போது அந்த தங்கக் கட்டிகளை அன்பளிப்பாக அனுப்பியவருக்குத் தருவார்.
ஐந்தாவது, அந்த மகான் அதைப் பெற்று கொண்டு நேராக அதே கடைக் காரரிடம் சென்று அதை ஒரு கோடிக்கு விற்று வெற்றியுடன் திரும்புவார்.
இப்போது அவரது ஒரு கோடி உழைத்து வந்த பணம் அல்லவா!!!

ஆனால் ,,,,,,

இது மே மாதம் வரை செல்லு படியாகிறது. ஜூன் முதல் அரசாங்கம் அதுக்கும் செக் வைக்கிறது.
இன்னொருவரிடமிருந்து பெறப்படும் தங்கக் கட்டிகளுக்கும் இனி வருமான வரி கட்டப் பட வேண்டும்.

நான் எதிர்ப்பார்க்கிறேன் , அதையும் சமாளிக்கும் திட்டங்கள் இருக்கும் அவர்களிடம்.

அட, இப்பப் பாருங்களேன்,எனது சட்டைப் பையில் உள்ள கிழிந்து போன 5 ரூபாயை எப்படி மாத்துறதுன்னு தெரியலங்க எனக்கு.

Wednesday, May 12, 2010

" 17 again "


சமீபத்தில் " 17 again " ஆங்கில திரைப் படம் பார்த்தேன் .


2009 ல் வெளியான படம்.

நல்ல கற்பனை, கதை சுருக்கமாக :
கதையின் ஆரம்பத்தில், ஹிரோ உயர் கல்வி யில் பயிலும் ஒரு கூடை பந்து விளையாட்டு வீரன் . அவனுக்கு கூடைப் பந்தின் மீதும் காதல், கூடப் படிக்கும் பெண்ணின் மீதும் காதல். ஒரு சமயம், கூடைப் பந்து பந்தயம் நடந்து கொண்டு இருக்கிறது. அவன் காதலியும் அங்கு வருகிறாள். இடையில் அவள் அழுது கொண்டே வெளியேற நேர, அவனுக்குக் கூடைப் பந்தா, காதலியா எனும் சூழ்நிலை எழும்ப காதலியை நோக்கி விரைகிறான்.

20 வருடாங்களுக்குப் பிறகு அவன் மண வாழ்க்கை அவனுக்குக் கசக்கிறது. அவனின் மனைவியும் விவாகரத்து கேட்க, அவன் வெறுப்பின் உச்சத்துப் போகிறான். ஒரு வேளை கூடைப் பந்தை வாழ்க்கையாக தேர்ந்த்தெடுத்து இருந்தால் வாழ்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறான் .

அப்போது அவனின் மகன் , மகளின் உயர் கல்வியில் படிக்க, அவனுக்குப் பழைய நினைவுகள் வந்து பள்ளியில் சென்று பழைய புகைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனின் பழைய தொடர்பாக ஒருவரைக் காண்பிக்கிறார்கள். அவர் இவன் எண்ணங்களை புரிந்து கொண்டு , (நமது நடையில் சொல்லப் போனால் , அவனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணி ), அவனை மீண்டும் இளைஞனாக மாற்றுகிறார். தொடர்கிறது கதை.

இப்பொழுது அவனுக்கு அவனுடைய 17 வயது மீண்டும் வருகிறது. நண்பனின் உதவியால் பள்ளியில் சேர்கிறான் . அங்கு அவனுடைய மகன், மகள் படிக்கிறார்கள். அங்கு அவனின் அனுபவங்கள் படமாக்கப் பட்டுள்ளது.
மீண்டும் கூடைப் பந்து விளையாடுகிறான். இடையில் அவனுடைய மனைவி அங்கு வர இவனைப் புரிந்து கொண்டு வெளியேற முயல மீண்டும் அதே சூழ்நிலை, மனைவியா, கூடைப் பந்தா; காதலுக்கு வெற்றி. மீண்டும் ஓடுகிறான் மனைவியைத் தேடி.

இதை நாம் இரண்டு விதமாக விமர்சிக்கலாம்.
  • காதலின் வழியில் , காதல் அழிவதில்லை.
  • எனது வழியில், காதல் வாழவும் விடுவதில்லை. சாகவும் விடுவதில்லை.
இதில் பல இடங்களில் டைரக்டர் ஐ எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அவற்றில் சில,
  • ஹீரோவின் நண்பன் ( தாமஸ் லோவோன் ).
  • மகள் தந்தையிடம் காதல் கொள்ளும் இடங்கள்
  • இளைஞனான ஹீரோ (ஜாக் எபிரோன்) அவனின் காதலியை அதாவது அவனுடைய வகுப்புத் தோழனான மகனின் அம்மாவை ரசிப்பது.
  • ஒரே கோச் இரண்டு இடங்களிலும்.
  • ஒரே மாதிரி களம் இரண்டு உச்சக் கட்ட காட்சிகளிலும்
  • இறுதியில் ஹீரோ அட்ரஸ் எழுதிய காகிதம் கொண்டு கோர்ட் காட்சியில் உணர்ச்சி மிகுந்து காதலை வசிப்பது .

படத்தில் ஹீரோ, டைரக்டர் நிமிர்ந்து நிற்கிறார்கள்.


டைரக்டர் : பர்ர் ச்டீர்ஸ்
எழுத்து : ஜசோன் பிலர்டி

ஹாலிவுட் டுக்கே உரித்தான அழகான ஒளிப்பதிவு. நல்ல திரைக்கதை.

பார்க்க போனால் படத்தில் லாஜிக் இல்லை. இருப்பினும் கற்பனைக்காக பார்க்கலாம். அப்புறம் நமக்கு நாமே சாக்கு போக்கு சொல்ல . இதுதாண்டா விதி ன்னு..

தெரிந்ததும் தெரியாததும்

சிறு சிறுத் துளிகள் இந்தியாவைப் பற்றி :

  • இந்தியா கடந்த ஒரு இலட்சம் வருடங்களாக எந்த நாட்டையும் சூறையாட வில்லை.
  • செஸ் விளையாட்டு இந்தியாவில் தான் உதயம். ( அதான் நம்மை விட மாட்டேங்குது )
  • உலகிலேயே முதல் கிரானைட் ஆலயம் நமது தஞ்சாவூர் பெரிய கோயில். அதன் சிகரம் 80 டன் எடை உள்ள ஒரே கல்லால் ஆனது.
  • உலகிலேயே உயரமான கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ் - ல் உள்ள "சைல் " எனும் ஊரில் உள்ளது.
  • 1896 வரை , இந்தியா மட்டுமே உலகில் டைமண்ட் க்கு மூலமாக இருந்தது.
  • பைலி பாலம் உலகிலேயே உயரமானது.
  • மென்பொருள் உலகில், இந்தியா 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  • மொத்தம் 300000 மசூதிகள் இந்தியாவில். உலகிலேயே மிக அதிகமானது.
  • யோகா இந்தியாவில் உதயமானது.
  • மிக முக்கியமானது : 1985 வரை இந்தியா வில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது இல்லை.
  • இந்தியாவின் அழகு, தாஜ் மஹால் கட்டப்பட 1000 யானைகள் உபயோகப்படுத்தப் பட்டதாக தகவல் .
  • அதிகமான சினிமா, ஒரு வருடத்தில் இந்தியா வில்தான் அதிகம் வெளியாகிறது.
  • இந்தியர்கள் ஒரு வருடத்தில் மூன்று பில்லியன் முறை தியேட்டர் செல்கிறார்கள். சினிமா பார்க்க
  • முதல் பல்கலைக்கழகம் இந்தியாவின் தக்ஷஷீலா , 700 கி.பி

Thursday, May 6, 2010

சும்மா.. செல்லு செல் ஆ பெயர்த்து எடுத்துடனும் டா !!!

ஆராய்ச்சியாளர்களின் விடாத முயற்சி, சிறிது மகிழ்ச்சி தர கூடிய முடிவைத் தந்துள்ளது. முழுவதுமாக இல்லையானாலும் முதற்படி வைத்தனர் அவர்கள்.

கடந்த வருடம் 27000 நபர்களைக் கொன்றதாக சொல்லப் பட்ட முயற்சி, மிக நீண்ட ஆய்வுக்குப் பிறகு 512 பேரின் ஆயுட்க்காலத்தை நீட்டித்ததாக முடிந்தது.

"முயற்சி திருவினையாக்கும்" .

மருந்து ஒன்றும் புதுதில்லை, நோயாளியின் செல்களே மருந்து என்கிறார்கள் .

"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்" என்ற நமது முன்னோர் வார்த்தை எவ்வளவு தெளிவானதொன்று. பலே பலே

நோயாளியின் உடலில் இருந்து எதிர்ப்புச் சக்தி உள்ள செல்களைப் பிரித்தெடுத்து , அதை ப்ராஸ்ட்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களில் உருவாகும் புரதத்தோடு இணைத்து ,அதை மீண்டும் பாதிக்கப்பட்ட செல்களில் செலுத்தும் போது, அது புற்றுநோய் செல்களைத தாக்குகிறது என்பது boston ஐ சேர்ந்த philip kantoff ன் விவாதம்............... சபாஷ் டாக்டரே !!!!

அவர் மேலும் சொல்கிறார் " இன்னும் 5 முதல் 10 வருடங்களில் மற்ற அனைத்து விதமான புற்றுநோய்க்கும் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக செய்து காண்பிப்பேன்" ..........
என்னாப்பா பேசிகிட்டே போர !!!
நாங்களும் சொல்வோம் எங்க ஊர்லயும் ஒரு டாக்டருக்கு IQ அதிகமாய்த்தான் இருந்ததுதுதுதுது ......

Wednesday, May 5, 2010

அழிவுக்கும் மழை ...

அவள் என்னைப் பார்த்தாள்,
என்னுள் சாரல்;
என்னைப் பார்த்து சிரித்தாள்,
சாரல் இப்போது தூரல்;
என்னிடம் பேசினாள்,
தூரலுக்குப் பிறகு சிறு மழை;
காதலைச் சொன்னாள்,
நல்ல மழை;
காலம் கடந்தது , அப்பா அம்மா என்றாள் ,
மழை இன்னும் விடவே இல்லை ;
இப்போது புரிந்தது - அது
விளைச்சலுக்கு அல்ல
வெள்ளத்துக்கு. .

எனது பொன்மொழிகள்

* திருமணம் முடிந்தது ;
முதல் வருடம் : அவன் பேசினான், அவள் கேட்டாள் ;
2 வது வருடம் : அவள் பேசினாள், அவன் கேட்டான் ;
3 வது வருடம் : இருவரும் பேசினர் , ஊரே கேட்டது
* திருமணம் ஆவது என்பது நண்பர்களுடன் நல்ல உணவு விடுதி செல்வது போன்றது ;
நமக்கு தேவையானதை ஆர்டர் செய்த பிறகு, நண்பன் ஆர்டர் பண்ணத பண்ணிருக்கலாமோ , அது நல்லா இருக்குமோன்னு தோணும்
* காதல் என்பது கனவு காண்பது போன்றது, கல்யாணம் என்பது அதுக்கு நாமே வைத்துக்கொள்கிற அலாரம் போன்றது.
* திருமணத்துக்கு முன்னால் பெண்ணின் கைப் பிடித்தால் அது காதல் , திருமணத்துக்குப் பின்னால் அவள் கைப் பிடித்தால் அது தற்காப்பு
( அவளிடமிருந்து )
* திருமணமான புதிதில் ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் நமக்கு காரணம் புரிகிறது , பத்து வருடங்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருந்தால் ஆச்சர்யம் தான் வருகிறது .
*காதலன் காதலியிடம் சொன்னான் " அன்பே, உனக்காக நான் நரகம் கூட செல்வேன்" . திருமணம் நடந்தது. உண்மையில் அவன் வாக்குத் தவறாதவன்.
* நண்பன் உன் மனைவியை விரும்புகிரானேன்றால், அதை விடப் பெரிய வழியில் எப்படி அவனைப் பழி வாங்கிட முடியும் உன்னால்.
* திருமணமானவன் பெண்டாட்டிக்காகக் காரின் கதவைத் திறக்கிறான் என்றால், ஓன்று அவன் கார் புதிது, இல்லை அவன் பெண்டாட்டி .

மனிதாபிமானம்.

ஒரு மேடை, அதில் பேச்சோ, கருத்தரங்கமோ, கவிதையரங்கமோ எதோ ஓன்று மிக விமரிசையாக நடக்கிறது. யாரோ பேசிக் கொண்டிருக்கிறார். மேடையில் பல பேர் வழக்கம் போல அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அப்போது அங்கே எல்லா இடத்திலும் உள்ளது போலவே ஒருத்தர் தாமதமாக வருகிறார் . வந்தவர் படிகளில் இடற எல்லோரும் தடுமாறி அவரைக் காக்க விரைகிறார்கள் ஒருவரைத் தவிர. அவர் அமர்ந்த இடத்திலேர்ந்து எழவில்லை.

பாரி சொல்கிறார் அவருக்கு கேட்காத மாதிரி, "ச்சே, என்ன மனிதரப்பா , ஒரு மனிதாபிமானம் வேண்டாம் மனிதருக்கு. அப்படியே கல் மாதிரி உட்கார்ந்து இருக்காரே " .
நிலைமை கட்டுக்குள் வந்தது. பாரியின் கைப்பேசி ஒலித்தது. உரையாடல் முடிந்து அணைத்து, அவர் தம்பிக்கு அழைத்து சொன்னார் " டேய், அம்மாவை போய் பாரு, ஹார்ட் அட்டாக்காம். எனக்கு மீட்டிங் முடிஞ்சு சின்ன பார்ட்டி இருக்கு . நாளைக்கு வரேன். "

மனிதாபிமானம்.

Tuesday, May 4, 2010

யாரும் விளக்கம் தர இயலுமா?



ஆச்சர்யமானது.. யாரிடமாவது பதில் உண்டா ? இது என்னவாக இருக்கும்?

இந்தப் புகைப்படம் எடுக்க பட்டது தெற்கு ஆப்ரிக்காவில். எடுத்தவர் சொல்கிறார், அவர் ஒரு ஆராயிச்சியாளர், பேய்களிடம் நம்பிக்கை இல்லாதவர்,
இதை அவர் அவருடைய கைப்பேசியில் அவரது வீட்டு சாளரம் வழி எடுத்தாராம். புகைப்படத்தில் உள்ள பெண் எடுக்கும் போது அவ்விடத்தில் இல்லையாம்.
இது உண்மை என்றும், யாரிடமிருந்தும் பெற வில்லை என்றும் உறுதியாக கூறுகிறார்.
புகைப் படத்தை இணைத்துள்ளேன்.

விமர்சனங்கள் வரவேற்கப் படுகிறது.

Monday, May 3, 2010

பத்து வழிகள்

யோசித்து யோசித்து , இப்போ எப்படியெல்லாம் யோசித்தால் புதுசா யோசிக்கலாம்னு கண்டு பிடிச்சு இருக்கேன் .

பத்து வழிகள் சிறப்பாக யோசிக்க ,
1, நல்லாவே யோசித்து எழுதுற பத்துப் பேரோட பேசுவோம் .
2, புதுசு புதுசா இடங்களை சுற்றிப் பார்த்து , பார்த்ததை நினைத்துப் பார்ப்போம்.
3, ஒரு விசயத்த குழந்தையா, கலைஞனா, பெண்ணா, நண்பனா , சாதரணமானவனா இப்படி பல வழிகளில் யோசிச்சு பார்ப்போம் .
4, சந்தோசமா சினிமா பார்ப்போம் .
5, நம்மளுகுள்ளேயே எதாவது குண்டக்க மண்டக்க கேப்போம். அதாவது நாயோட மொழிய எப்படி கத்துக்கலாம்? மாம்பழம் பழுத்ததும் ஏன் மஞ்சள் நிறமாக உள்ளது? நமது கால்களுக்கு ஏன் கால்கள் என்று பெயர் வைத்தார்கள்?
6, இயற்கையோடு இணைந்து வாழ்வோம். மரம், செடி, கொடிகளை ரசிப்போம், நிலவை அழைப்போம், இருளை ஏமாற்றுவோம், வெளிச்சத்துக்கு விளக்கேத்துவோம் .
7, பாடல்கள் கேப்போம்.
8, ஒரு நோட் எடுத்துட்டு பாருங்கப்பா நானும் எழுதுறேன்னு என்னல்லாம் யோசிக்கிறோமோ எல்லாத்தையும் எழுதுவோம்.
9, எதாவது ஒரு வார்த்தை வச்சுட்டு எவ்ளோதான் நம்மால் எழுத முடியுதுன்னு பார்ப்போம்.
10, தனிமைல யோசிப்போம்





அப்புறம்

ஆரம்பிச்சுட்டேன், என்னடா எழுதலாம்னு யோசிக்கிறேன் யோசிக்கிறேன் யோசிக்கிறேன் .. ( இன்னும் பத்து, பதினைந்து முறை எனக்காக யோசிக்கிறேன்னு படிங்க , ரொம்ப யோசிக்கிறேன்)
இப்பதான் தெரியுது ,
எனக்கு கதை எழுத வராது, கட்டுரை எழுத வராது, உரை நடையும் வராது, கவிதை வராது,
சரிங்க, அப்புறம் என்ன hair குடா எழுத வந்தன்னு என்னையே நான் கேட்டேன். (நீங்க கேக்குறதுக்கு முன்னாடி)
பதில் ,
" எல்லாம் ஒரு விளம்பரம்தான் அண்ணே !!!"

அறிமுகம்




வணக்கம்