கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, December 31, 2010

மகிழ்ச்சி

அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி என்பதை புள்ளியாக பார்ப்பதா, வட்டமாக பார்ப்பதா?

புள்ளியாக பார்த்தால் உண்டு, இல்லை என இரண்டில் ஒரு பதில் கிடைக்கும்; வட்டமாக பார்த்தால் விட்டத்தைப் பொறுத்து வேறுபடும். ஆனால் அது ஒரு வட்டமாகவே இருக்கிறது. நல்லது, கெட்டது, நன்மை, தீமை, தவறு, சரி போன்று.

ஒரு மனிதன் அவன் அவனாகவே, தன்னிலை கொண்டு மகிழ்வது எக்காலங்களில்?

தன்னிலை என்பது எதை குறிக்கும்?
என் மூளை சுருக்கங்களில் ஒன்று இதற்கு பதிலாக,   மனையாள் வரும் போதே அந்நிலை அழிபடுகிறது என்கிறது.

மனையாள் என்பது மனைவியை மட்டுமன்றி, மனதை ஆளும் அனைத்தையும் குறிக்கட்டும். தன்னிலை எனும் அந்நிலை இழந்த எவனும் முழுவதுமாக மகிழ்வதாக நான் ஒப்பவில்லை.

ஆனால் அவன் மகிழ்ச்சி என அவளுடன் அல்லது அவற்றுடன் கொண்டாடுவதையே விரும்புபவனாக இருக்கும் பட்சத்தில்? இந்த கேள்வி பெண்களுக்கான அந்த கேள்விக்கு பதிலாகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த நிலைப்பாட்டுக்கே வருகிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ பெண்கள் பிறருடன் கொண்டாடுவதையே அவர்களது கொண்டாட்டமாக கொள்கிறார்கள்.

ஆண்களைப் பொறுத்த வரை அது இல்லை.  அவர்கள் கொண்டாடுவதே இல்லை; காரணம், பெண்கள் மனம் எளிதில் திசை மாறும்; ஆண்கள் பெரும்பாலும் அந்தந்த நேரத்திற்கான உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள். உடனுக்குடன் எதிர்பார்ப்புகள் இருக்கும் அவர் எண்ணங்கள் மற்றும் செயல்களில். இதனால் பெரும்பாலான நேரங்களில் கொண்டாட்ட மன நிலை இருப்பதே இல்லை.

ஒரு விஷயம் நடக்க வில்லை எனக் கவலைப்படும் ஆண்கள் கூட்டம், அந்த நிலையை, அந்த உணர்வை கடக்கும் பட்சத்தில் உலகை, பணத்தை, உணர்வை, பெண்களை கண்டுகொள்ளாத முழு வளர்ச்சி அடைகிறார்கள்.

ஆக மகிழ்ச்சியை நோக்கி எளிதில் திசை மாறி பயணம் செய்யும் பெண்களே மனதைப் பொறுத்த வரை முதிர்ந்தவர்கள் என்பது என் தனிப் பட்டக் கருத்து.

இந்த வரிசையில் பெண்களை வைக்கும் நான் உணர்ச்சி எனும் கடலை கடக்க முடியாத சாதாரண ஆணாகவே இருக்கிறேன்.

அந்நிலையில் கடக்கும் ஆண் மதியாளன், சுயபுத்தி உடையவன், விஞ்ஞானி என தன்னுள் உள்ளவற்றை உணர்ந்தவனாகிறான்.
அடிமையாகாமல் அதை ஆட்கொள்ளத் துவங்குகிறான்

அந்த உணர்ச்சிக் கடலைக் கடக்க துவங்காத கைக்குழந்தைகள், தன் நிலையில் நிறைவு காணும் மனம் கொண்டவர்கள், நிலையே அறியாத நினைவு பிறழ்ந்தவர்கள் மட்டுமே உண்மையாக குறையில்லாமல் மகிழ்கிறார்கள்.

இந்த ஆண்டு இனிய ஆண்டாக, விரும்பிய அனைத்தும் பெற்று மகிழ்ச்சியடைய வாழ்த்துக்கள்.    

என்னையும் எழுத முயல்பவனாக, என்னுள் பல மாற்றங்களை, திருப்பங்களை விதைத்த  2010 மறக்க முடியாத ஆண்டு.

1 comment:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!!

    ReplyDelete