கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, December 27, 2010

வெளியேற்றம் - யுவன் சந்திர சேகர்

ஒரு நாவல் படித்து முடிக்கும் போது நாவலைப் பொறுத்து நமது உணர்வுகள் வேறுபடுகிறது. சில நாவல்களால் சந்தோசம் ஏற்படுகிறது, சில நாவல்களால் படிப்பினை (வார்த்தை விளையாட்டு), சில நாவல்களைப் படிக்கும் போது சிந்தனை விரிகிறது; அதாவது மூளையில் சுருக்கங்கள் அதிகமாகிறது. இவை அனைத்தையுமே ஒரே நாவல் தரும் போது அது கிட்டத்தட்ட பைபிள், கீதை ஆகிறது.


நாவல்களைப் படிக்க ஆரம்பித்தது அனைவரும் போல ராஜேஷ் குமாரிலிருந்து. பின்னர் நண்பனின் உதவியால் பலர் அறிமுகமானார்கள்; அந்த பட்டியல் மிகவும் பெரிதானது. வாழ்க நட்பு!!

தற்போது கிட்டிய தூரத்தில் எனக்கு யுவன் சந்திர சேகரையும் அவனே அறிமுகப் படுத்தினான்.

அதில் பகடையாட்டம், மணற்கேணி, வெளியேற்றம் படித்தாகி விட்டது. முதலிரண்டும் மனம் கவர்ந்தவை; மூன்றாவது என்னை இதை எழுத தூண்டியது.

ஜெயமோகன் படிக்கும் போது ஒரு மயக்கம் வந்தது; வார்த்தைகள் தந்த மயக்கம். இப்படியும் சிந்திக்கலாம் என்பதன் துவக்கம்; அதுவே யுவன் தனது எழுத்தைப் படிக்கும் போது அது ஒரு மாயை என்றே தோன்றும் அளவு, யதார்த்தமான வார்த்தைகளில் தீவிரமான சிந்தனைகள்.

ஜெயமோகனின் சிறப்பாய் நான் உணர்வது, துவக்கத்தில் இருந்த மயக்கத்தை நாவலின் இறுதி வரை தந்து கொண்டிருப்பார். யுவனின் கடைசி பக்கங்கள் என்னைக் கவர வில்லை. (சங்கமம் எனும் தலைப்பில் எழுதப் பட்ட முடிவு).

ஆனால் இவரது சிந்தனை வரிகள் என்னைத் திகைக்க வைத்து அதை STD செய்து நண்பனுக்கு வாசித்து மகிழும் அளவு இருந்தன. ஆரம்பத்தில் இருந்த சிந்தனை இறுதி வரை இருந்தது; தீவிரம் மட்டுமே குறைந்தது என்பது என் கருத்து.

மனிதன் லௌகீக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீரோட்டமாய் வெளியேறுவதை தலைப்புகளின் கீழ் கொணர்ந்து ஊற்று, புனல், சங்கமம் என முறையே எண்ணம், வெளியேற்றம், முடிவுக்கு தொடர்பு படுத்தி உள்ளார்.

இந்த வெளியேற்றம் லௌகீக வாழ்க்கையிலிருந்து வெளியேற்றம் எனப் பொது அர்த்தம் கொண்டாலும்; மனதளவில் நான் பேசும் போது என் சிந்தனை என் வார்த்தைகளைக் கேட்கும் நிமித்தம் என்னிலிருந்து என்னை வெளியேற்றி காண்பதைக் குறிப்பதாக நான் கண்டேன்;

பாத்திரப் படைப்பில் கூரிய கவனிப்பில் வியந்தேன், முழு தமிழ்நாட்டையும் அந்த இட மொழி நடையுடன் நாடகத் தன்மை கொடுத்து படைக்கும் போது படிக்கும் ஆர்வம் கூடுகிறது.

உவமைகள் அந்தந்த பகுதியை பிரதிபலிப்பது, வெளியேற்றம் மீதிருந்த அவரின் தாகத்தை வெளிப் படுத்துகிறது.

சிறந்த வரிகளை எடுத்துக் கூற விழையும் பட்சத்தில் நாவலைப் பிரதி எடுக்க வேண்டி வரும் எனும் அச்சத்தால் அந்த முயற்சியைக் கை விடுகிறேன். நான் வியந்த அனைத்து விசயங்களையும் எழுதவில்லை.

வெளியேற்றம் நாவல் இரண்டு முறை படித்து முடித்து விட்டேன்; சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. படித்து மகிழ பரிந்துரைக்கலாம்.

No comments:

Post a Comment